openGlobalRights-openpage

பொறுப்பெடுத்துக்கொள்ளும் தன்மைக்கும் அப்பால்: ஸ்ரீலங்காவில் கூடி வாழ்வதற்கான போரட்டம்

Kadirgamar.jpg

தொகுப்புரை – தமிழர் மற்றும் சிங்களவ‌ர் ஆகிய இரு தரப்பினரும் தங்களுடைய கடந்த காலம் தொடர்பாகத் தம்மை சுய விசாரணை செய்து கொண்டாலே தவிர, போர்க் குற்றங்கள் பற்றிய ஐக்கிய நாடுகள் சபையினால் வாக்குறுதியளிக்கப்பட்ட புலனாய்வு அறிக்கையினால் நாட்டில் பெரிய அளவிலான சாதகமான மாற்றங்களை ஏற்படுத்த முடியாது. English, සිංහල (Sinhalese)

Ahilan Kadirgamar Mahendran Thiruvarangan
2 June 2015

இலங்கையின் உள்நாட்டுப் போர் 2009 மே மாதத்தில் முடிவடைந்தது.  போரின் கடைசிக் கட்டத்தின் போது நிகழ்த்தப்பட்ட பெருமளவிலான மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்புக் கூறுவதிலிருந்து அரசாங்கம் தவறியமையினை நாட்டின் மிகவும் பிரதானமான பிரச்சினையாகப் பார்க்கும் தன்மை பல ஆண்டுகளாகவே, பல செயற்பாட்டாளர்களிடமும் காணப்பட்டது. சக்திவாய்ந்த நாடுகள், சர்வதேச மனித உரிமைகளுக்கான அமைப்புக்கள், தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்கும் பிரிவினர் ஆகியோருடன் இணைந்து சில அரச சார்பற்ற அமைப்புக்கள் (என் ஜி ஒ க்கள்) மற்றும் நாட்டில் இருக்கும் சில துணிவு மிக்க செயல்முனைவர்கள் ஆகியோர் சர்வாதிகார ராஜபக்ஷ‌ அரசாங்கத்தின் மீது சர்வ‌தேச ரீதியில் நெருக்கடியைக் கொடுத்தனர். இதன் உச்ச விளைவாகப் போரின் போதான மீறல்களினை விசாரிப்பதற்காக ஐக்கியநாடுகளின் மனித உரிமைகளுக்கான ஆணைக்குழு (UNHRC) 2014 மார்ச் மாதத்தில் ஒரு விசாரணைக் கமிசனினை நிறுவியது. 

ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை எதிர்வரும் செப்டம்பர் மாதத்தில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜனவரி மாதம் 2015 இல் இலங்கையின் பல்வேறு சமூகங்களின் ஆதரவுடன், மைதிரிபால சிறிசேன அவர்கள் புதிய ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டார். ஜனவரி மாதத்தில் நடந்த தேர்தலில் ராஜபக்ஷவின் ஆட்சி ஜனநாயக ரீதியாகத் தூக்கியெறியப்பட்டது. புதிய‌ அரசாங்கம், ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கைக்கு எப்படிப்  பதிலளிக்கப் போகின்றது அல்லது அது போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணையினை முன்னெடுக்குமா போன்ற விடயங்கள் தொடர்பாக ஒரு நிச்சயமற்ற நிலைமையே தற்போது காணப்படுகிறது. போர்க்குற்றங்களுக்குப் பொறுப்புக்கூறுவது தொடர்பான சர்வதேச முயற்சிகளும் மற்றும் நாட்டுக்குள்ளே நடைபெறும் விவாதங்களும் அரசியலாக்கப்பட்டுள்ளன என்பது மட்டும் நிச்சயம். உண்மையான இன நல்லிணக்கத்துக்கு மிக அவசரமாகத் தேவைப்படுகின்ற, தமிழர் மற்றும் சிங்களவ‌ர் ஆகிய இருதரப்பினரினாலும் முன்னெடுக்கப்பட வேண்டிய அவர்களது கடந்த காலம் தொடர்பான சுய விமர்சனத்துடன் கூடிய மதிப்பீட்டினை ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையினால் மாத்திரம் உருவாக்க முடியாது.

புவிசார் அரசியல் காரணங்கள், குறிப்பாக சீனாவுடனான ராஜபக்ஷ‌ அரசாங்கம் கொண்டிருந்த நெருக்கம், இலங்கைக்கு எதிராக UNHRC யின் தீர்மானத்திற்கு, அமெரிக்காவினை அனுசரணையாக இருக்க வைத்தது. UNHRC யினால் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவின் அறிக்கையானது 2015 மார்ச் மாதத்திலேயே வெளியிடப்பட்டிருக்க வேண்டும். ஆனால் மைத்திரிபால‌ சிறிசேன ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, அதிகாரபலம் மிக்க மேற்கு நாடுகள் மற்றும் இந்தியா ஆகியவற்றின் குறுக்கீடுகள் காரணமாக, புதிய அரசாங்கத்துக்கு, இலங்கைக்குள் ஓர் உள்ளக விசாரணையினை மேற்கொள்ளுவதற்கு ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டு, இந்த அறிக்கையினை வெளியிடுவது தாமதப்படுத்தப்பட்டிருக்கிறது. எனினும், இந்த சிறிதளவு தாமதத்திற்கும் கூட இலங்கையிலும், புலம்பெயர்ந்து வெளிநாடுகளிலும் இருக்கும் தமிழ் தேசியவாத பிரிவினர் வன்மையாக எதிர்க்குரல் கொடுத்தார்கள். 

போரினால் பாதிக்கப்பட்டோர், உயிழந்தவர்கள் மற்றும் காணாமல் போனவர்கள் தொடர்பாகப் பொறுப்புக்கூறுவது பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களையும், போரிலே தப்பியவர்களையும் பொறுத்தவரையில் மிகவும் முக்கியமானது. ஆனால் உண்மைகள் வெளிக்கொண்டுவரப்பட வேண்டும் என அவர்கள் குரல் கொடுப்பது மற்றும் ஐக்கியநாடுகள் சபையின் விசாரணைகளிலே அவர்கள் பங்குபற்றுதல் போன்றன‌, தேசியவாத‌ அரசியலின் நிகழ்ச்சி நிரலினாலும், சர்வதேச மனித உரிமைகளை வலியுறுத்தும் அமைப்புக்களின் தனிப்பட்ட விருப்பங்கள் மற்றும் நிகழ்ச்சி நிரலினாலும் இடையீடு செய்யப்படுகின்றன‌. இப்படியாக உயிர்பிழைத்தவர்களின் வாழ்க்கையை அரசியலாக்கும், சர்வ‌தேசமயமாக்கும் செயற்பாடுகள், போருக்குப் பின்னர் சமூகப் பொருளாதார ரீதியில் இந்த மக்கள் எதிர்நோக்கும் சவால்களினைக் கருத்தில் எடுப்பதில்லை; அல்லது மக்களின் துயரங்களையும், பிரச்சினைகளினையும் அரசினால் மேற்கொள்ளப்படும் வன்முறைகள் மற்றும் மீறல்கள் என்ற ஒற்றைப் பரிமாணப் பார்வையிலே இந்தச் செயற்பாடுகள் நோக்குகின்றன.

Kadirgamar.jpg

Flickr/Veronica Olivotto (Some rights reserved)

A Tamil man converses with a Sinhalese man.


சொல்லப்போனால், மீறல்கள் தொடர்பான பொறுப்புக்கூரல் என்பது நினைவுகூரலுடனும், கடந்த காலத்துடனும் எதிர்காலத்துடனும் தொடர்புபட்டது. இது சமுதாயங்களுக்கு மத்தியில் தங்களுடைய கடந்த காலம் தொடர்பாக விமர்சன ரீதியிலான மதிப்பீட்டினை மேற்கொள்ளப்பட வேண்டியதன் அவசியத்தினைக் கோரி நிற்கிறது. ஆனால் கடந்த காலம் தொடர்பான சுய மதிப்பீடு பற்றிய அக்கறை இலங்கைச் சமூகங்கள் மத்தியில், அதிலும் குறிப்பாக சிங்கள-பௌத்த மற்றும் தமிழ்ச் சமூகங்களினைச் சேர்ந்த தேசியவாதத் தரப்புக்களிடம் காணப்படவில்லை. அவர்களின் தேசியவாத பறைசாற்றலும், இலங்கை என்பது, போர் குற்றங்கள் மற்றும் பொறுப்புக்கூரல் தொடர்பான சர்ச்சைகளுடன் மட்டுமே தொடர்புபட்ட ஒரு நாடு என மேலைத் தேயத்தில் மேற்கொள்ளப்படும் சித்தரிப்புக்களும் உண்மையைத் தேடும் செயன்முறைகளினை செயலற்றதாக்கி, பலவீனப்படுத்தி, இலங்கையில் உள்ள சமூகங்களினை ஒன்றிலிருந்து ஒன்று ஒதுக்கி வைக்கின்றன.

ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகத்தின் ஆணையினைப் பெற்ற ஒரு குழுவினால், மார்ச் மாதம் 2011 இல் வெளியிடப்பட்ட‌ முந்தைய அறிக்கையானது, போரின் கடைசி மாதங்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயிரக்கணக்கான தமிழ் மக்களை பணயக் கைதிகளாக‌ வைத்திருந்ததாகவும், வலுக்கட்டாயமாக இளைஞர்களையும் குழந்தைகளையும் போரில் ஈடுபடுத்தியதாகவும், தப்பித்துச் செல்ல முயன்றவர்களைக் கொன்றதாகவும் குற்றம் சாட்டியுள்ளது. புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட‌ இந்த அராஜகங்கள் தொடர்பாக தமிழ்ப் பொதுமக்கள் உரையாடுவது, எதிர்காலத்திற்கான ஒரு மாற்று அரசியல் பாதையை வகுக்கவும், சிறுபான்மையினரின் உண்மையான, நீதியான‌ மனக்குறைகளைப் புலிகளின் அரசியலில் வேறுபடுத்தி, சிங்கள சமுதாயத்தினர் நோக்குவதற்கும் அவசியமாகின்றது. தமிழர்கள் தாம் தனித்துவிடப்பட்டதாகவும், புறமொதுக்கப்பட்டதாகவும் கருதுவதற்குக் காரணமான அரசின் வெறித்தனத்தினை சிங்கள சமுதாயத்தினர் விமர்சனத்துக்குள்ளாக்குவது எவ்வளவு அவசியமோ அதே போல‌ உள்நாட்டுப்போரின்போது, சிங்கள மற்றும் முஸ்லிம் சமுதாயத்தினருக்கு எதிராகப் புலிகள் வெறித்தனமாக மேற்கொண்ட‌ தாக்குதல்கள் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதவை என்பதனைத் தமிழர்கள் வெளிக்காட்டுவதும் அவசியமாகும்.  துரதிஷ்டவசமாக, தமிழ்த் தேசியவாதிகள் இப்படியானதொரு சுயவிமர்சனச் செயன்முறையில் ஈடுபடுவதனைத் தவிர்க்கிறார்கள்; அத்துடன் புலிகளின் அரசியலினை விமர்சிப்போரை புறமொதுக்கவும் முற்படுகிறார்கள்.  கடந்த காலம் தொடர்பாகத் தமிழர்களிடம் இருந்து சுயவிமர்சனம் மேலெழும்புவதனை இந்த அணுகுமுறை தடுக்கிறது.

தென்னிலங்கையில் சிங்கள-பௌத்தத் தேசியவாதிகள் அரசின் தவறுகளைப் பரிசீலிப்பதைத் தவிர்ப்பதற்காக ஏகாதிபத்தியத்திற்கான எதிர்ப்பினை ஒரு போர்வையாக உபயோகிக்கிறார்கள்; அரசினால் மேற்கொள்ளப்பட்ட பல படுகொலைகள், பொதுமக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட பாகுபாடற்ற தாக்குதல்கள் மற்றும் இம்சைகள் மற்றும் ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயிருப்பவை உள்ளிட்ட நிகழ்வுகள், போரில் உயிர்தப்பிய தமிழர்களின் மனதிலும் உடலிலும் தழும்புகளை விட்டுச்சென்றுள்ளன‌. அதிகார சக்திவாய்ந்த மேற்கு நாடுகள் மற்றும் ஏனைய‌ வளர்ந்து வரும் சக்திவாய்ந்த நாடுகள் ஆகியவை ஐக்கிய நாடுகள் சபை போன்ற அமைப்புக்களின்  நிகழ்ச்சித் திட்டங்களை தங்களின் சுய விருப்பங்களினதும் நலன்களினதும் அடிப்படையில் உருவாக்குகின்றனர் என்பது உண்மையாக இருப்பினும், இலங்கையில் மேற்கொள்ளப்பட வேண்டிய எதிர்ப்பு அரசியல் ஏகாதிபத்தியத்துக்கு எதிரானதாக மட்டும் இருக்க முடியாது. போராட்டமானது, ஏகாதிபத்தியத்திற்கு எதிரான விழிப்பினை உருவாக்குவதோடு, பெரும்பான்மைவாதத்தினையும், தேசிய பாதுகாப்பு என்ற வெற்றுக் கோஷத்தினையும் முன்வைக்கும் அரசிற்கும்  மற்றும் "விடுதலை இயக்கங்கள்" எனத் தம்மைக் கூறிக்கொள்ளும் அதிகாரம் மிக்க தரப்புக்களுக்கும் சவாலாக பல்வேறு மட்டங்களில் இடம்பெற‌ வேண்டும்; இந்த எல்லாத்தரப்புக்களும் மக்களின் உரிமைகளையும், இலட்சியங்களினையும் பாதிப்புக்குள்ளாக்குகின்றனர்.

மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறுதல் பற்றிய உள்நாட்டு புரிதல்கள், உள்நாட்டிலிருக்கும் அரசு மற்றும் தேசியவாதத் தரப்பினரதும் மற்றும் சர்வதேச சமூகத்தினரதும், அரச சார்பற்ற அமைப்புக்களினதும் கருத்துருவாக்கங்களினால் பாதிக்கப்படுகின்றன‌. உதாரணத்திற்கு, 2000 ஆம் ஆண்டுகளில் நோர்வே நாட்டினர் மத்தியஸ்தம் செய்த போர் நிறுத்தத்தின் போது, தமது அரசியலுடன் உடன்படாது மாற்று அரசியல் முன்னெடுப்புகளினை மேற்கொண்ட தமிழர்களினைப் புலிகள் கொலைசெய்தமையினையும், சிறுவர்களைப் புலிகள் போரில் சேர்த்துக்கொண்டமையினையும் உள்நாட்டு மற்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் ஆரம்பத்திலேயே எதிர்க்காது விட்டமை மனித உரிமை அமைப்புக்களுக்கு கெட்ட பெயரையே ஈட்டித் தந்தது. அதுபோலவே, தற்போது பொறுப்புக்கூரலுக்கான போராட்டம் என்ற பெயரில் தமிழர்கள் இலங்கையில் உள்ள ஏனைய சமூகங்களில் இருந்து மேலும் புறமொதுக்கப்படுவதனைத் தூண்டும் செயற்பாடுகளில் தமிழ் தேசியவாதிகள் ஈடுபடுகின்றமையினையும், சிங்களவ‌ர்களுடனும் இந்தப் பிரச்சினை தொடர்பாகப் பேச முற்படுகின்ற‌ தமிழர்களைத் தேசத்துரோகிகள் எனப் பட்டம் கட்டுவதனையும் இந்த அமைப்புக்களும், மனித உரிமைச் செயற்பாட்டாளர்களும் கண்டும் காணாதது போல மௌனமாக இருக்கிறார்கள். 

இலங்கை அரசு, புலிகள் மற்றும் இதர ஆயுதமேந்திய குழுக்கள் ஆகியோர் என எல்லாத் தரப்பினராலும் மேற்கொள்ளப்பட்ட மீறல்களை, மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர்கள் (யாழ்ப்பாணம்) என்ற‌ உள்நாட்டு மனித உரிமைக் குழுவினர், போர் இடம்பெற்ற காலத்தில் தொடர்ச்சியாகப் பதிவு செய்து வந்துள்ளனர். மிகமோசமான மனித உரிமை மீறல்களில் சிலவற்றை வெளிச்சம் போட்டுக் காட்டிய இந்தக் குழுவினர், தமது பணியினை, தமிழர்களுக்கு மத்தியில் மாற்று அரசியற் கருத்துக்களினை உருவாக்குவதற்கான வெளிகளை ஏற்படுத்துவதுடன் தொடர்புபட்ட ஒன்றாகவும், தமிழர் மத்தியில் சுய விசாரணையினைத் தூண்டும் ஒன்றாகவும் நோக்கினர். அதுபோலவே, மீறல்கள் தொடர்பான பொறுப்புக்கூரலுடன் தொடர்புபட்ட உள்நாட்டு முனைப்புக்களானாலும் சரி சர்வதேச முனைப்புக்களானாலும் சரி, நாட்டில் உள்ள சமூகங்கள் தம்மைச் சுய விமர்சனம் செய்வதன் ஊடாக‌, ஒன்றுடன் ஒன்று உரையாடுவதனைத் தூண்டுவதன் மூலமாக மாத்திரமே, பொறுப்புக்கூரலின் ஊடாகச் சமூகங்கள் ஒன்றுடன் ஒன்று கூடிவாழக் கூடிய சூழலினை ஏற்படுத்த முடியும் என்பதனைப் புரிந்து கொள்ள வேண்டும்.

இலங்கையில் உள்ள‌ சிறுபான்மையினரின் வரலாற்று ரீதியான மனக்குறைகளினைத் தீர்ப்பதுவும் மற்றும் நீண்ட கால உள்நாட்டுப்போரின் நினைவலைகளுக்கும், அவற்றின் வெளிப்பாடுகளுக்கும் அரசியல் ரீதியாக முக்கியத்துவம் கொடுப்பதுவும் மிகவும் பெரிய பணியாக அமையப்போகிறது. பெண்களின் மீதான அடக்குமுறை, ஒடுக்கப்பட்ட சாதியினரினைச் சமூகத்தின் மையத்திலிருந்து வெளியகற்றுதல், கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் வாழும் வறியவர்களினைச் சுரண்டுதல்- இவை போன்ற அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பது அவசியம். ராணுவமயமாக்கப்பட்டதும் மத்தியமயமாக்கப்பட்டதுமான அரசினைத் திருத்தி அமைத்தல், மற்றும் ஆதிக்கம் நிறைந்த நாட்டின் அரசியல் கலாச்சாரத்தை ஜனநாயகமாக்குதல், ஒதுக்கப்பட்ட மக்களினது இருப்பினைப் பறிக்கும் செயல்களினை முடிவிற்குக் கொண்டுவருதல் போன்ற இலக்குகளினை எய்தும் வகையில் முன்னெடுக்கப்படும் அரசியல் முயற்சிகளின் பலன்கள், வடக்கு மற்றும் கிழக்குப் பகுதியில் போரில் உயிர் பிழைத்தவர்களை மட்டுமல்லாது, இலங்கையின் அனைத்துக் குடிமக்களினையும் சென்றடைய வேண்டும். இலங்கையின் அரசியல் எதிர்காலம் தொடர்பான கலந்துரையாடல்கள் நாட்டிலே நிலவும் தேசிய இனப்பிரச்சினையினை சிங்கள-தமிழ் மக்களுக்கிடையேயான முரண்பாடு பற்றிய ஒன்றாகக் குறுக்கிப்பார்க்கும் நிலை மாறி, அவை காலனித்துவக் காலத்தில் மிகவும் நியாயமற்ற ஊதியத்தினை வழங்கி வேலைக்கு அமர்த்தப்பட்ட சமூகத்தினைச் சேர்ந்த மலையகத் தமிழர்களுக்கு எதிராக வரலாற்று ரீதியாக மேற்கொள்ளப்பட்ட சுரண்டல்களையும் கருத்திலே கொள்ள வேண்டும்.  சிங்கள-பௌத்தத் தேசியவாத மற்றும் தமிழ்த் தேசியவாத சக்திகளிடம் இருந்து இலங்கையின் முஸ்லிம் சமுதயாத்தினர் எதிர்கொண்ட‌ ஒட்டுமொத்த வன்முறையினைப் பற்றியும் இங்கு பேச வேண்டியது அவசியம். 

போரின் போதான மீறல்கள் தொடர்பான ஐக்கியநாடுகள் சபையினால் நிறுவப்பட்ட குழுவின் புலனாய்வின் அடிப்படையில் வெளியாக உள்ள‌ அறிக்கையானது எந்த அளவுக்கு இலங்கையில் உள்ள இனங்களுக்கு இடையில் நல்லிணக்கம் உருவாகுவதற்கு முக்கியத்துவம் உள்ள ஒன்றாக‌ இருக்கும் நாம் எதிர்பார்க்கலாமோ, அதே அளவுக்கு அது இனங்கள் ஒன்றில் இருந்து ஒன்று தனிமைப்பட்டுப் போவதனையும் செய்யக்கூடும். அரசு, ஒவ்வொரு சமுதாயத்தினுள்ளும் இருக்கும் முரட்டுப்பிடிவாதம் கொண்ட சக்திகள், மற்றும் சக்தி வாய்ந்த சர்வ‌தேசத் தரப்புக்கள் என அனைத்து ஆதிக்கம் மிக்க தரப்புக்களுக்கும் சவாலாக அமையகக் கூடிய தீர்க்கமான அரசியல் நிலைப்பாடுகளை எடுப்போர் சமூகத்திலே எவ்வாறான‌ முற்போக்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்கப் போகிறார்கள் என்பதே ஐக்கிய நாடுகளின் அறிக்கையினால் நாட்டிலே ஏற்படப் போகும் தாக்கங்களினை  இறுதியாக தீர்மானிக்கும் சக்தியாக இருக்கப்போகின்றது.

imgupl_floating_none

Had enough of ‘alternative facts’? openDemocracy is different Join the conversation: get our weekly email

Comments

We encourage anyone to comment, please consult the oD commenting guidelines if you have any questions.
Audio available Bookmark Check Language Close Comments Download Facebook Link Email Newsletter Newsletter Play Print Share Twitter Youtube Search Instagram WhatsApp yourData