மக்களாட்சிப் பாரம்பரியத்தில் பெருமை கொண்டிருக்கும் நாடு இந்தியா. ஆனால், தங்களது உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் மனித உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பதில் அவர்கள் காண்பிக்கும் தயக்கம் வியப்பளிக்கிறது.
இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால், 1947ல் இந்தியா பிரிட்டன் ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்றபின்னர், சர்வதேச அளவில் காலனியாக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், சமநீதி, எல்லாருக்கும் கௌரவம் மற்றும் சுதந்தரம் போன்றவற்றுக்காகவும் அவர்கள் மிகவும் உரக்கக் குரல் கொடுத்துவந்தார்கள். ஆனால், நாள்கள் செல்லச் செல்ல, இந்தியா மெல்ல தன்னுடைய கூட்டுக்குள் ஒடுங்கிவிட்டது. இன்றைக்கு மனித உரிமை சார்ந்த விஷயங்களில் அதன் குரல் அநேகமாகக் கேட்பதே இல்லை, சர்வதேச அளவிலும் சரி, இந்திய எல்லைகளுக்குள்ளும் சரி.
இந்தத் தயக்கத்துக்கு முக்கிய காரணம், காஷ்மீர். பெரும்பாலும் இந்துக்கள் வசிக்கும் இந்தத் தேசத்தில் காஷ்மீர்மட்டும்தான் முஸ்லிம்கள் அதிகமுள்ள மாநிலம். அதுதொடர்பாக பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் பல ஆண்டுகளாகவே பிரச்னைகள் உள்ளன. இந்த விஷயத்தில் மூன்றாம் நாடுகள் தலையிட்டு பிரச்னையைத் தீர்த்துவைக்கவேண்டும் என்று தொடர்ந்து முயன்றுவருகிறது பாகிஸ்தான். ஐக்கிய நாடுகள் (ஐநா) சபையில் பாகிஸ்தான் தொடர்ந்து பலமுறை காஷ்மீரில் மனித உரிமைகள் மீறப்படுவதாகச் சொல்லிவருகிறது.
ஆகவே, இந்தியா தனது உள் விவகாரங்களில் வெளி நபர்கள் தலையிட்டுவிடுவார்களோ என்று அஞ்சுகிறது, இதனால், பொதுவாகவே மனித உரிமை சார்ந்த விஷயங்களில் தலையிடாமல் இருக்கும் கொள்கையைப் பின்பற்றுகிறது. இது மிகவும் ஏமாற்றமளிக்கும் விஷயம்.
காரணம், ஐ. நா. சபையின்மூலம் காலனியாக்கத்தை நிறைவுக்குக் கொண்டுவருவதிலும், இனவெறிக்கு எதிராகப் போராடுவதிலும் இந்தியாவின் பங்களிப்பு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது. உதாரணமாக, 1976ல் இனவெறி பிடித்த தென் ஆப்பிரிக்க அரசின் குற்றங்களுக்கு எதிராக ஐ. நா. முதன்முறையாக விசாரணை நடத்தியபோது, அதற்குப் பெரும் ஆதரவு அளித்த நாடுகளில் ஒன்று இந்தியா.
அப்போது ஒரு தேசத்தின் உள்நாட்டு விவகாரங்களில் பிறர் தலையிடக்கூடாது என்பதுதான் மரபாக இருந்தது. ஆனால் இந்தியா அதை மீறி, இந்த விஷயத்தில் தென் ஆப்பிரிக்காவுக்குமட்டும் விதிவிலக்கு வழங்கவேண்டும் எனும் கொள்கையோடு போராடியது.
அணிசேரா அமைப்பை உருவாக்குவதில் முக்கியப் பங்காற்றியவர், அதன் சிற்பிகளில் ஒருவர் இந்திய முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு. இந்தியா எந்த அளவுக்கு அமெரிக்கா மற்றும் சோவியத் யூனியனிடம் இருந்து விலகி நின்றது என்கிற விஷயம் விவாதத்துக்குரியது. ஆனால், ஒன்றுமட்டும் உறுதி, மனித உரிமை விஷயங்கள் என்று வந்துவிட்டால், இந்தியாவின் வெளியுறவு அமைச்சகத்தில் பல அதிகாரிகளுக்கு இன்னும் அதே பழைய ‘பனிப்போர் மனோநிலை’தான் இருக்கிறது.
மேற்கத்திய நாடுகள் முன்பு எப்போதோ ”உரிமைகள்” மற்றும் “சுதந்தரம்” போன்ற சொற்களை சோவியத் யூனியனுக்கு எதிரான கோஷங்களாகப் பயன்படுத்தியது உண்மைதான். ஆனால் அதன்பிறகு உலகம் எவ்வளவோ மாறிவிட்டது. இப்போதும் அதையே மனத்தில் வைத்துக்கொண்டு தயங்கி நிற்கவேண்டியதில்லை.
பர்மாவை எடுத்துக்கொள்ளுங்கள். இந்தியாவுக்கு வந்த பர்மிய மக்களாட்சித் தலைவர் மற்றும் நோபல் பரிசு வென்ற ஆங் சான் சுகி, பர்மாவின் ஆட்சியாளர்களுக்கு எதிராக இந்தியா போதுமான அளவு குரல் கொடுக்கவில்லை என்றார்.
நேபாளம் மற்றும் மாலத்தீவுகளை எடுத்துக்கொள்ளுங்கள். நேபாள அரசர் ஞானேந்திரா மற்றும் மாலத்தீவுகள் அதிபர் மௌமூன் அப்துல் கய்யூம் என்ற இரண்டு அதிகாரவர்க்கத்தினரையும் இந்தியா தொடர்ந்து ஆதரித்துவந்தது. இவ்விரு நாடுகளிலும் இயங்கிவந்த மக்களாட்சி அமைப்புகளைத் தொடர்ந்து புறக்கணித்துவந்தது.
பின்னர் இந்தியா நேபாள மக்களாட்சிக் குழுக்களை ஆதரித்தது உண்மைதான், இவ்விரு நாடுகளிலும் சுதந்தரமான மற்றும் நியாயமான தேர்தல் நடக்கவேண்டும் என்று இந்தியா திரும்பத் திரும்பக் குரல் கொடுத்துக்கொண்டிருப்பதும் உண்மைதான். சமீபத்தில் இந்தியாவின் வெளியுறவுச் செயலாளர் சுஜதா சிங் காட்மண்டு மற்றும் மலே ஆகிய நகரங்களுக்குச் விஜயம் செய்து இந்த விஷயத்தில் இந்தியாவின் நிலைபாட்டை வலியுறுத்தியுள்ளார்.
இப்படி இந்தியாவின் சில தலையீடுகள் மனித உரிமைகளை முன்னிறுத்தும் நோக்கத்துடன் செய்யப்படுபவையாகத் தோன்றினாலும், பெரும்பாலும் அவை அரசியல் லாபம் கருதிச் செய்யப்படுபவையாகவே இருக்கும். உதாரணமாக, 2012ல் ஐ. நா. மனித உரிமை கவுன்சிலில் இந்தியா இலங்கையை எதிர்த்தது. இது அவர்களுடைய தமிழகக் கூட்டணிக் கட்சியை மகிழ்விப்பதற்காகச் செய்யப்பட்ட ஏற்பாடுதான்.
அதேபோல், நேபாளத்தில் மக்களாட்சியை ஆதரிக்கும் சக்திகளுக்கு இந்தியா ஆதரவு தெரிவிக்கிறது. இதன் உண்மையான நோக்கம், அவர்கள் விரும்பும் கட்சிகளை ஆதரிப்பதாகதான் இருக்கும்.
மாலத்தீவுகளில்கூட இந்தியா மக்களாட்சியை ஆதரிப்பது மனித உரிமைகளுக்காக அல்ல, இந்தியப் பெருங்கடலில் தனது பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்வதற்காகதான்.
சுருக்கமாகச் சொன்னால், மற்ற எல்லாவற்றையும்விட தனது சொந்த லாபமும் வியூகமும்தான் இந்தியாவுக்கு முக்கியம். உலக அளவில் பெரும்பாலான நாடுகள் இப்படிதான்!
உரிமை மற்றும் மக்களாட்சி விஷயங்களில் இந்தியாவின் தலையீட்டினால் சில எதிர்பாராத பலன்களும் கிடைத்திருக்கின்றன. உதாரணமாக, 1990களில் பூடானின் நேபாளி இன அழிப்பை இந்தியா ஆதரித்துவந்தது. ஆனால், 2013 ஜூலை 13ம் தேதி பூடான் தேசிய சபைத் தேர்தலுக்குச் சற்று முன்பாக, இந்தியா பூடான்மீது வர்த்தகக் கட்டுப்பாடுகளை விதித்தது, இதனால், எதிர்க்கட்சியாகிய “மக்கள் ஜனநாயகக் கட்சி” வெற்றி பெற்றது, ஆனால் இதெல்லாமே அந்தக் கட்சி இந்தியாவுக்கு விசுவாசமாக இருக்க உறுதி தெரிவித்தபிறகுதான் நடந்தது.
இந்தியாவின் இந்த வர்த்தகக் கட்டுப்பாடுகள் எப்போது வந்தன தெரியுமா? ஜூன் 2012ல் நடைபெற்ற ரியோ + 20 கருத்தரங்கின்போது பூடானின் அப்போதைய பிரதமர் ஜிக்மெ வொய் தின்லெ (பூடான் அமைதி மற்றும் வளமைக் கட்சியைச் சேர்ந்தவர்) சீன அதிபர் வென் ஜியாபோவைச் சந்தித்துப் பேசியபிறகுதான்.
மிக விரைவில், இந்தியாவின் பூடான் கொள்கைகள்தான் பூடான் தேர்தல் அரசியலின் முக்கியமான பிரச்னைகளாக இருக்கும் என்பது உறுதி. அவர்கள் ஒட்டுமொத்தமாக இந்தியாவுக்கு எதிராகத் திரும்ப யோசிப்பதும்கூட சாத்தியமே!
பூடான் பொதுத் தேர்தலுக்கு முன்பாக இந்தியா அந்நாட்டின்மீது விதித்த வர்த்தகக் கட்டுப்பாடுகள் இந்திய ஊடகங்களால் பலமாகக் கண்டிக்கப்பட்டன. தனக்கு இழப்பு எதுவும் இல்லாதவரை இதுபோன்ற துணிச்சலான செயல்கள் நிகழும். ஆனால் பொதுவாக உலக அளவில் மக்களாட்சி எங்கும் பரவி வரும் நிலையில் இந்தியா தனது முக்கியத்துவத்தை இழந்துவருகிறது.
இலங்கை விவகாரத்தைத் தவிர்த்துப் பார்த்தால், இந்தியாவின் தலையீடுகளில் இந்திய சமூகக் குழுக்களின் பங்களிப்பு என்றும் எதுவுமே கிடையாது. மார்ச் 2012ல் ஐ. நா. மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு எதிரான மசோதாவை முன்வைக்க தமிழ் அரசியல் கட்சிகளும், தமிழ்ச் சமூகக் குழுக்களும் குரல் கொடுத்தன, ஆனால் மற்ற இந்திய சமூகக் குழுக்கள் இந்த விஷயத்தில் அமைதியாகவே இருந்தன.
பொதுவாகவே இந்தியாவின் மனித உரிமைக் குழுக்கள் குறுகிய மனப்பான்மை கொண்டன, சில குறிப்பிட்ட விஷயங்கள், இனம், ஜாதி அல்லது புவியியல் பிரச்னைகளில்மட்டும் கவனம் செலுத்தக்கூடியவை.
இந்தியா தனது மனித உரிமைக் கொள்கையை மேம்படுத்தாவிட்டால், அது மனித உரிமை மற்றும் ஐ. நா. மனித உரிமை அமைப்புகளை இல்லாத பனிப்போரின் குறுகிய கண்ணோட்டத்தில்தான் பார்க்கும். இதற்கு உதாரணமாக, சமீபத்தில் (செப்டம்பர் 2013) நிறைவடைந்த மனித உரிமை கவுன்சிலின் 24வது அமர்வில் “பண்பான சமூகத்துக்கான இடம்: சட்டப்படியும், நடைமுறைப்படியும் இதற்கு ஒரு பாதுகாப்பான மற்றும் இதனை ஊக்குவிக்கக்கூடிய சூழலை உருவாக்குதல் மற்றும் பராமரித்தல்” என்ற மசோதாவை இந்தியா எதிர்த்தது.
இந்தியாவும் மற்ற பல நாடுகளும் இந்த மசோதாவை எதிர்த்தன, அந்த மசோதா அப்படி என்னதான் சொல்கிறது?
“மனித உரிமை, மக்களாட்சி மற்றும் சட்ட நெறிமுறைகளை வலியுறுத்துவதில் முக்கியமான மற்றும் நியாயமான பங்கு வகிக்கும் சமூகக் குழுக்களை அரசுகள் பகிரங்கமாக ஏற்றுக்கொள்ளவேண்டும். மனித உரிமைகளையும் சட்ட நெறிமுறைகளையும் ஊக்குவித்தல், பாதுகாத்தலுக்குப் பங்களிக்கும் தீர்மானங்கள் மற்றும் இதர தொடர்புடைய தீர்மானங்களில் பொது விவாதத்துக்கு ஏற்பாடு செய்து, அதில் இந்தக் குழுக்கள் பங்கேற்க வழிவகை செய்யவேண்டும்.”
சமூகக் குழுக்களுக்கு இடமளிக்கும் இதுபோன்ற ஒரு மசோதாவை தென் கொரியாவில் உள்ள ஒரு கிணற்றுத் தவளை நாடு எதிர்க்கலாம், உலகின் மிகப் பெரிய மக்களாட்சி அதை எதிர்க்கலாமா?
உள்நாட்டிலும், ஐ.நா.விலும் சமூகக் குழுக்களுக்கான இடத்தை மறுக்கும் இந்தியாவின் நோக்கம், உலக அளவில் அதிர்வுகளை ஏற்படுத்தும். ஆனால் துரதிருஷ்டவசமாக, இந்தியச் சமூகம் இதற்கு இன்னும் எதிர்வினை செய்யத் தொடங்கவில்லை. அவர்கள் எதிர்த்துக் குரல் கொடுக்கும்வரை, இந்தியாவின் முக்கியத்துவப் பட்டியலில் உலகின் பிற பகுதிகளில் உள்ள மனித உரிமை விஷயங்கள் இடம்பெறுவது சந்தேகமே!

Read more
Get our weekly email
Comments
We encourage anyone to comment, please consult the oD commenting guidelines if you have any questions.