Skip to content

பொறுப்பெடுத்துக்கொள்ளும் தன்மைக்கும் அப்பால்: ஸ்ரீலங்காவில் கூடி வாழ்வதற்கான போரட்டம்

தொகுப்புரை – தமிழர் மற்றும் சிங்களவ‌ர் ஆகிய இரு தரப்பினரும் தங்களுடைய கடந்த காலம் தொடர்பாகத் தம்மை சுய விசாரணை செய்து கொண்டாலே தவிர, போர்க் குற்றங்கள் பற்றிய ஐக்கிய நாடுகள் சபையினால் வாக்குறுதியளிக்கப்பட்ட புலனாய்வு அறிக்கையினால் நாட்டில் பெரிய அளவிலான சாதகமான மாற்றங்களை ஏற்படுத்த முடியாது. Englis

Published:

இலங்கையின் உள்நாட்டுப் போர் 2009 மே மாதத்தில் முடிவடைந்தது.  போரின் கடைசிக் கட்டத்தின் போது நிகழ்த்தப்பட்ட பெருமளவிலான மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்புக் கூறுவதிலிருந்து அரசாங்கம் தவறியமையினை நாட்டின் மிகவும் பிரதானமான பிரச்சினையாகப் பார்க்கும் தன்மை பல ஆண்டுகளாகவே, பல செயற்பாட்டாளர்களிடமும் காணப்பட்டது. சக்திவாய்ந்த நாடுகள், சர்வதேச மனித உரிமைகளுக்கான அமைப்புக்கள், தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்கும் பிரிவினர் ஆகியோருடன் இணைந்து சில அரச சார்பற்ற அமைப்புக்கள் (என் ஜி ஒ க்கள்) மற்றும் நாட்டில் இருக்கும் சில துணிவு மிக்க செயல்முனைவர்கள் ஆகியோர் சர்வாதிகார ராஜபக்ஷ‌ அரசாங்கத்தின் மீது சர்வ‌தேச ரீதியில் நெருக்கடியைக் கொடுத்தனர். இதன் உச்ச விளைவாகப் போரின் போதான மீறல்களினை விசாரிப்பதற்காக ஐக்கியநாடுகளின் மனித உரிமைகளுக்கான ஆணைக்குழு (UNHRC) 2014 மார்ச் மாதத்தில் ஒரு விசாரணைக் கமிசனினை நிறுவியது. 

ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை எதிர்வரும் செப்டம்பர் மாதத்தில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜனவரி மாதம் 2015 இல் இலங்கையின் பல்வேறு சமூகங்களின் ஆதரவுடன், மைதிரிபால சிறிசேன அவர்கள் புதிய ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டார். ஜனவரி மாதத்தில் நடந்த தேர்தலில் ராஜபக்ஷவின் ஆட்சி ஜனநாயக ரீதியாகத் தூக்கியெறியப்பட்டது. புதிய‌ அரசாங்கம், ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கைக்கு எப்படிப்  பதிலளிக்கப் போகின்றது அல்லது அது போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணையினை முன்னெடுக்குமா போன்ற விடயங்கள் தொடர்பாக ஒரு நிச்சயமற்ற நிலைமையே தற்போது காணப்படுகிறது. போர்க்குற்றங்களுக்குப் பொறுப்புக்கூறுவது தொடர்பான சர்வதேச முயற்சிகளும் மற்றும் நாட்டுக்குள்ளே நடைபெறும் விவாதங்களும் அரசியலாக்கப்பட்டுள்ளன என்பது மட்டும் நிச்சயம். உண்மையான இன நல்லிணக்கத்துக்கு மிக அவசரமாகத் தேவைப்படுகின்ற, தமிழர் மற்றும் சிங்களவ‌ர் ஆகிய இருதரப்பினரினாலும் முன்னெடுக்கப்பட வேண்டிய அவர்களது கடந்த காலம் தொடர்பான சுய விமர்சனத்துடன் கூடிய மதிப்பீட்டினை ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையினால் மாத்திரம் உருவாக்க முடியாது.

புவிசார் அரசியல் காரணங்கள், குறிப்பாக சீனாவுடனான ராஜபக்ஷ‌ அரசாங்கம் கொண்டிருந்த நெருக்கம், இலங்கைக்கு எதிராக UNHRC யின் தீர்மானத்திற்கு, அமெரிக்காவினை அனுசரணையாக இருக்க வைத்தது. UNHRC யினால் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவின் அறிக்கையானது 2015 மார்ச் மாதத்திலேயே வெளியிடப்பட்டிருக்க வேண்டும். ஆனால் மைத்திரிபால‌ சிறிசேன ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, அதிகாரபலம் மிக்க மேற்கு நாடுகள் மற்றும் இந்தியா ஆகியவற்றின் குறுக்கீடுகள் காரணமாக, புதிய அரசாங்கத்துக்கு, இலங்கைக்குள் ஓர் உள்ளக விசாரணையினை மேற்கொள்ளுவதற்கு ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டு, இந்த அறிக்கையினை வெளியிடுவது தாமதப்படுத்தப்பட்டிருக்கிறது. எனினும், இந்த சிறிதளவு தாமதத்திற்கும் கூட இலங்கையிலும், புலம்பெயர்ந்து வெளிநாடுகளிலும் இருக்கும் தமிழ் தேசியவாத பிரிவினர் வன்மையாக எதிர்க்குரல் கொடுத்தார்கள்.